யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சில பீடங்கள் தொடர்ந்து இயங்காது

386 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு, அறிவித்தல் ஒன்றை பதிவாளர் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

யாழ். பல்கலைகழக பதிவாளர் வி.காண்டீபன் இது தொடர்பாக தெரிவிக்கையில்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2014, 2015 கல்வியாண்டுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கும், 2015, 2016 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

மேற்குறித்த கல்வியாண்டுக்கான விடுதி மாணவர்கள் நாளை 19 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) விடுதிகளுக்குத் திரும்ப முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீடத்தில் சட்டத் துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத்துறை மாணவர்கள் தவிர்ந்த ஏனைய துறைகளைச் சார்ந்த மூன்றாம், நான்காம் வருட மாணவர்கள் விடுதி உட்பட பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிப்பதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் அறிவுறுத்தலையும் மீறி புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்றமையால் இரு தரப்புக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை காரணமாக சட்டத்துறை, இராமநாதன் நுண்கலைத்துறை தவிர்ந்த ஏனைய துறைகள் மறுஅறிவித்தல் வரை இடம்பெறமாட்டாது எனப் பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளதாக யாழ்பல்கலைகழக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்துள்ளார்.