தயா மாஸ்ரரின் வழக்கு ஒத்திவைப்பு(காணொளி)

380 0

thaya-masterதழிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்ரர் மீது சாட்டப்பட்ட குற்றம் சட்டத்தின் பிரகாரம் குற்றமல்ல என்று வவுனியா மேல்நீதிமன்றில் வாதிட்டதாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தயாமாஸ்ரர் மீதான வழக்கு இன்றையதினம் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சாட்டப்பட்ட குற்றம் சட்டத்தின் பிரகாரம் குற்றமல்ல என தனது ஆட்சேபனையை தெரிவித்ததாக சட்டத்தரணி சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவ பகுதிக்கு வெளியேறிய மக்களை தடுத்து நிறுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டு, வவுனியா மேல்நீதிமன்றுக்கு சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தயாமாஸ்ரருக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் குற்றம் 7ஈ பிரிவில் குற்றம் சுமத்தப்பட்டமை பிழையானது என்பதை அரசதரப்புச் சட்டத்தரணி மேல்நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார்.
வவுனியா மேல்நீதிமன்றத்தில் தயாமாஸ்ரர் மீதான குற்றப்பத்திரிகை வலுவற்றதாக இருந்தாலும் சட்டவலு அற்றதென்ற தீர்ப்பை கொடுப்பதற்கு மேல்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றதா? அல்லது மேல் முறையீட்டு நீதிமன்றமத்திற்கு அல்லது உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கின்றதா என்பதை இருதரப்பு சட்டத்தரணிகளும் எழுத்து மூலமாக சமர்ப்பிக்குமாறு மேல்நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
இன்றைய மன்றில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஒன்றரை மணித்தியாலங்கள் குற்றப்பத்திரிகை வலுவற்றது என்பதை அரசியல் அமைப்பு மற்றும் சட்டங்களை ஆதாரம் காட்டி தனது சமர்ப்பணத்தைச் செய்துள்ளார்.
இதன் பின்னர் நீதிபதி வழக்கை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இன்;றைய வழக்கின்போது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு உதவியாக சட்டத்தரணி நிரான் அங்கிற்றலும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக சட்டத்தரணி ஆசாத் நாவவியுடன் அரச சட்டத்தரணி சகிஸ்மாயில் ஆகியோரும் முன்னிலையாகியிருந்தனர்.