மாந்தை மனித புதை குழியை பார்வையிடாது சென்ற ஐ.நா. வின் விசேட பிரதிநிதி!

1403 0

மன்னார் மாந்தை மனித புதைகுழி காணப்பட்ட இடத்திற்குச் சென்ற  ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப், மற்றும் குழுவினர் அப்பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை கண்ட நிலையில்,மாந்தை மனித புதை குழியை பார்வையிடாது மன்னாருக்கு திரும்பிய சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னாருக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப், மற்றும் குழுவினர் மன்னார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று நிலைமைகளை ஆராய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த குழுவினர் இன்று சனிக்கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி உள்ள இடத்தை பார்வையிட வருகை தந்தனர்.

இதன் போது அப்பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர்.

மனித புதைகுழி காணப்பட்ட இடத்திற்கு சென்ற ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப், மற்றும் குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று சிறிது நேரம் காத்து நின்றதோடு, ஊடகவியலாளர்கள் அப்பகுதியில் செய்தி சேகரிக்க காத்திருந்த நிலையில், மனித புதைகுழியினை பார்வையிடாது மன்னாரிற்கு திரும்பிச் சென்றனர்.

பின்னர் மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பிரஜைகள் குழுவில் பல்வேறு தரப்பினருடனும் அவசர சந்திப்புக்களை மேற்கொண்டனர். எனினும் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் இடைக்கால நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பப்லோ டி கிறிப்,மற்றும் குழுவினர் என்ன நோக்கத்திற்காக மன்னாரிற்கு வருகை தந்தார் என்பதனை அறிந்து கொள்ள முடியவில்லை.

 

Leave a comment