தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்: எச்.ராஜா

12515 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் எல்லையோர பாதுகாப்பு குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டை பயங்கரவாத சக்தி மற்றும் பிரிவினைவாதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. எல்லையை ராணுவம்போல் பாதுகாக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குறிப்பாக மீனவ சமுதாய மக்கள் மத்தியில் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இளைஞர்களின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக இருக்கும் கொசுவை ஒழிக்க முடியவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் கொசு ஒழிப்பு நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால் உள்ளாட்சி அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. மருத்துவத்துறையும் சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை. இந்த வி‌ஷயத்தில் தமிழக உள்ளாட்சித்துறையும், மருத்துவத்துறையும் செயலிழந்து காணப்படுகிறது. அதனால்தான் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பியிருக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.

மத்திய அரசின் அணுகுமுறை எவ்வளவு அதிகமாக மாநில அரசின் மூலமாக மக்களுக்கு உதவ முடியுமோ அந்த பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். மக்களுக்கு உதவுகிற வி‌ஷயத்தில் மட்டுமே மாநில அரசுடன் மத்திய அரசு தலையிடுகிறது. இதனை எதிர்கட்சிகள் வேறு மாதிரி குற்றம்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment