அவசர விபத்துக்களின் போது விபத்துக்குட்பட்டவருக்கு சிகிச்சையளிக்கவென எதிர்காலத்தில் அம்பியூலன்ஸ் சேவையுடன் அதிநவீன மற்றும் சகல வைத்திய வசதிகளுடன் ஹெலிகொப்டர் சேவையும் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முதலுதவி சேவைக்கான உபகரணங்களை பாடசாலைகள் மற்றும் பிராந்திய வைத்திய நிலையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு தொற்றா நோய் தடுப்பு பிரிவினால் இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்தப்பட்டது. இதன்போது சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர் பைசல் காசிம், வைத்திய அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சிறந்த அபிவிருத்தி அடைந்த நாடுகளை போன்ற சுகாதார அபிவிருத்தி கொண்ட நாடாகிய இலங்கையில், இருதய நோய்களுக்கு அடுத்து அதிகளவான மரணத்தை தோற்றுவிப்பது வீதி விபத்துக்களாகும். ஆனால் விபத்துகளின் போது விபத்துக்குட்பட்டவருக்கு அவசரமாக முதலுதவி சேவை கிடைக்குமாயின் அவரின் உயிராபத்து குறைக்கப்படும். அதற்கான ஒரு அபிவிருத்தி நடவடிக்கையாக எதிர்காலத்தில் அவசர முதலுதவி சேவையில் ஹெலிகொப்டரும் பென்ஸ் வாகனங்களும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்த 88அம்பியூலன்ஸ் வாகனங்களுடன் மேலதிகமாக 250 வாகனங்கள் எதிர்வரும் வருடத்தில் எமக்கு இலவசமாக கிடைக்கும். இந்த வாகனங்களுடன் உடனடி சேவையை பெற்றுக்கொடுக்கவென பிரத்தியேக வைத்திய சேவை நிபுணர் ஒருவரும் காணப்படுவார். 2018 காலப்பகுதியில் முழுமையாக இந்த அவசர வைத்திய முதலுதவி சேவைக்கான அனைத்து தேவைகளும் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என்றார்.

