பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 100 ரூபா வழங்க திட்டம்

341 0

இலங்கையில் வறுமை மற்றும் பிற காரணங்களினால் பாடசாலை செல்லாத மாணவர்களுக்கு மாதம்தோறும் சிறப்பு கொடுப்பணவு வழங்குவது குறித்து கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.

அடுத்த வருடம் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஊடாக மாணவர்கள் இடை விலகல் தடுக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களின் கல்வி ஆர்வத்தையும் அதிகரிக்க முடியும் என கல்வி  அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 100 வீதம் மாதாந்த கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்படவிருப்பதாகவும்,  இலங்கையில் தற்போது 5 முதல்17 வரை பாடசாலை கல்வி பெறுவதற்கான வயதாகும். அடுத்த ஆண்டு 5 முதல் 19 வரை வயதை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் சுமார் 45 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

இலவசக் கல்வித் திட்டத்தின் கீழ் இலவசப் பாட நூல்கள், சீருடை, சத்துணவு மற்றும் மருத்துவக் காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.

இந்த வசதிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தும் பாடசாலை செல்லக்கூடிய வயதுடைய 4,52,661 பேர் பாடசாலை செல்வதில்லை என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 51,249 பேர் இதுவரை ஒரு நாள் கூட பாடசாலை செல்லாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் ” மாணவர் வரவுக்கு ரூபாய் 100 என்ற இந்த யோசனை அவசியமற்றது” என கூறுகின்றது. “அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல்களை மையப்படுத்திய இந்த யோசனை முன் வைக்கப்படுகின்றது” என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

“கல்வியில் சம வாயப்பு மற்றும் பாகுபாடு இன்றி பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுவது பற்றித்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment