அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

201 0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். தப்பி ஓடிய மாணவனை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லப்பாக் நகரில் டெக்சாஸ் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. மாகாணத்தின் மிக முக்கிய பல்கலைக்கழகம் என்பதால் பல்கலைக்கழகத்தின் வளாகத்துக்குள்ளேயே போலீஸ் நிலையமும் அமைந்து உள்ளது.

இந்த நிலையில், பல்கலைக்கழக விடுதியில் தங்கி உள்ள ஒரு மாணவருக்கு உடல் நலம் குன்றி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அந்த மாணவரை பார்க்க அவரது அறைக்கு சென்றனர். அப்போது அவரது அறையில் போதை மருந்து மற்றும் அதனை பயன்படுத்துவதற்கான கருவிகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து, விசாரணைக்காக அந்த மாணவரை போலீசார் பல்கலைக்கழக வாளகத்தில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்கு போலீஸ் அதிகாரி ஒருவர் மாணவரிடம் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த மாணவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, போலீஸ் அதிகாரியை நோக்கி சுட்டார்.

இதில், அவரது தலையில் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதையடுத்து அந்த மாணவர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி, அங்கு உள்ள விளையாட்டு மைதானத்துக்குள் பதுங்கி கொண்டார்.

நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின் போலீசார் அவரை கைது செய்தனர். அவரது பெயர் ஹோல்லிஸ் டேனியல்ஸ் என்பதும், அவர் முதலாம் ஆண்டு மாணவர் என்பதும் தெரியவந்து உள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment