ரகுராம் ராஜன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற வாய்ப்பு – அமெரிக்க நிறுவனம் தகவல்

16933 0

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக, அமெரிக்க தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘கிளாரிவேட் அனலிடிக்ஸ்’ நிறுவனம், அறிவியல், கல்வி, காப்புரிமை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், நடப்பாண்டில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை தயாரித்துள்ளது. இதில், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் பெயர் இடம்பெற்றுள்ளது.

2008-ம் ஆண்டில் அமெரிக்கா பங்குச்சந்தைகள் பேரழிவை சந்திக்கும் என முன்கூட்டியே கணித்துச் சொன்னவர், ரகுராம் ராஜன். அவர் கணிப்புப்படி, அந்த ஆண்டில் அமெரிக்கா, பொருளாதார ரீதியில் பலத்த பின்னடைவை சந்தித்ததோடு, அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது.

பொருளாதாரம் தொடர்பாக புகழ்பெற்ற பல புத்தகங்களை ரகுராம் ராஜன் எழுதியுள்ளார். அவர், பொருளாதாரத் துறைக்கு, அரிய பணிகள் ஆற்றியுள்ளதாக கிளாரிவேட் நிறுவனம் கருதுகிறது.

இந்தாண்டில், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் வாய்ப்புள்ளதாக கிளாரிவேட் அனலிடிக்ஸ் தயாரித்துள்ள பட்டியலில் ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் ரகுராம் ராஜன் பெயரும் இடம்பெற்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில், கிளாரி வேட் நிறுவனம் தயாரித்த பட்டியல்களில் இடம்பெற்றவர்களில், 45 பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment