சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட்டு

378 0

சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கக் கூடாது என்று கூறியுள்ள ஐகோர்ட்டு, நிபந்தனையுடன் அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், அறப்போர் இயக்கத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் தமிழகத்தில் நடைபெறும் ஊழலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சென்னை மயிலாப்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘கொள்ளையனே வெளியேறு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த போலீசிடம் அனுமதி கேட்டு கடந்த மாதம் மனு கொடுத்தேன். ஆனால் அந்த கூட்டத்தை நடத்த போலீசார் அனுமதி வழங்க மறுக்கின்றனர்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர் ஆஜராகி மனுதாரர் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து மயிலாப்பூர் உதவி கமிஷனர் கடந்த 4-ந் தேதி பிறப்பித்த உத்தரவின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் மனுதாரர் இயக்கம் தமிழகத்தில் பொதுமக்களை தூண்டிவிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அமைதியான முறையில் ஒன்றுகூடி பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், தங்களது கருத்துகளை தெரிவிப்பதற்கும், ஒவ்வொருவருக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது.

ஆனால் மனுதாரர் இயக்கம் பொதுமக்களை தூண்டிவிட்டு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் இந்த பொதுக்கூட்டம் நடக்கும்போது சமூக விரோதிகள் ஊடுருவி கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த காரணத்தைகூறி போலீசார் மனுதாரருக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளனர். போலீசார் கூறும் இந்த காரணத்தை ஏற்க முடியாது. ஏனென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கையாள்வதற்காகத்தான் காவல்துறையே உருவாக்கப்பட்டது. எனவே மனுதாரர் அமைதியான முறையில் பொதுக்கூட்டம் நடத்த நிபந்தனையுடன் போலீசார் அனுமதி வழங்க வேண்டும். இதற்காக மனுதாரர் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டு புதிய கோரிக்கை மனுவை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Leave a comment