இன்னும் 2 நாட்களில் இரட்டைஇலை சின்னம் நம்மை வந்து சேரும்: ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

590 24

இன்னும் 2 நாட்களில் இரட்டை இலை சின்னம் நம்மை வந்து சேரும் என்று தர்மபுரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தர்மபுரியில் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது தர்மபுரி மாவட்டத்தில் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் இந்த விழா நடக்கிறது. இதுவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாக்களிலேயே இங்கு நடக்கும் விழாதான் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கு பெருந்திரளாக கூடியுள்ள பொதுமக்கள் கூட்டமே இந்த விழாவின் சிறப்பை உணர்த்துகிறது. இந்த விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள், பணியாளர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

மக்களுக்கு நன்மை செய்பவர்களை இறைவனே படைக்கிறார். அவ்வாறு இறைவனால் படைக்கப்பட்டு தமிழகத்திற்கு வழங்கப்பட்டவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆவர். மக்களுக்கான சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் சேவையை எம்.ஜி.ஆர். செய்தார். அவர் வழியிலேயே ஜெயலலிதாவும் மக்கள் நலனுக்கான ஆட்சியை வழங்கினார். குரு எந்த வழியோ? அதே வழியில் சிஷ்யர்கள் இருப்பார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் விசுவாச தொண்டர்களான நாம் அவர்கள் காட்டிய வழியிலேயே செயல்பட்டு வருகிறோம்.

தமிழகத்தின் அனைத்து மக்களும் மகிழும் வகையில் உருவான எம்.ஜி.ஆர். ஆட்சியை தானும் தங்கள் பிள்ளைகள் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைத்த சிலர் முடக்கப் பார்த்தனர். ஆனால் அந்த தடைகளையெல்லாம் தாண்டி ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும், சாமானியர்கள் சகலமும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் எம்.ஜி.ஆர். ஆட்சியை நடத்தினார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் தாரக மந்திரத்தை நிறைவேற்றும் வகையில் எம்.ஜி.ஆர் உருவாக்கிய சத்துணவு திட்டம், பசியில்லாத தமிழ்நாட்டை உருவாக்க வழிவகை செய்தது.

வாரியார் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது எம்.ஜி.ஆர் கடைசி பந்தியிலேயே உணவு அருந்துவார். அதுதொடர்பாக வாரியார் கேட்டபோது கடைசி பந்தியில் நான் உணவு அருந்தினால் அந்த பந்தியில் சாப்பிடுபவர்களுக்கும் அனைத்து பதார்த்தங்களும் கிடைக்கும் என்று கூறுவார். அத்தகைய நல்ல மனம் படைத்த எம்.ஜி.ஆர். தனது திரைப்பட படப்பிடிப்புகளில் தொழிலாளர்களுக்கு தனது செலவிலேயே உணவுகளை கொடுத்து மகிழ்ந்தவர்.

எம்.ஜி.ஆர். வழியிலேயே மக்களுக்கு நல்லாட்சியை ஜெயலலிதா வழங்கினார். நமது உழைப்பை, திறமையை சிலர் குறைத்து மதிப்பீடு செய்து விட்டார்கள். மீன்குஞ்சுகளுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டுமா? எனக்கு பின்னாலும் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் 100 ஆண்டுகளுக்கு மேலும் ஆட்சியில் இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அ.தி.மு.க. ஆட்சியை குறைகூறும் எதிர்க்கட்சியினர் அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் காவிரி பிரச்சினை, முல்லைபெரியாறு பிரச்சினை உள்ளிட்ட தமிழகத்தின் உரிமை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தில் நடைபெறும் நமது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று மாட்டுச்சந்தையில் துண்டு போட்டு கைகளை மறைத்து பேரம் பேசுவதுபோல் சிலர் தெரிந்தோ, தெரியாமலோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேறாது. இரட்டைஇலை சின்னம் இன்னும் 2 நாட்களில் நம்மை வந்து சேரும். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா இரட்டை இலை சின்னத்தை நமக்கு பெற்றுத்தரும். சொந்தகட்சிக்கே தலைவராக வர முடியாதவர் தமிழக முதல்-அமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார். தமிழக மக்கள் அதற்கு எப்போதும் துணை போக மாட்டார்கள். தமிழக மக்கள் நமது பக்கம் உள்ளனர். நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்வார்கள். நமது விசுவாச தொண்டர்களே வாழ்வார்கள்.இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Leave a comment