தேசத்துரோக செயல்களில் எந்தவொரு குடிமகனும் ஈடுபடக்கூடாது

349 0

201608220821174204_Nationalism-being-questioned-in-the-name-of-freedom-of_SECVPFதேசத்துரோக செயல்களில் எந்தவொரு குடிமகனும் ஈடுபடக்கூடாது என்று பா.ஜனதா தேசிய தலைவர் பேசினார்.
கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு நேற்று அதிகாலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கோவாவில் இருந்து ரெயில் மூலம் வந்தார். மங்களூரு சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, அங்கு பா.ஜனதாவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்குள்ள அலுவலகத்தில் அவர், பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மந்திரி சதானந்த கவுடா, பா.ஜனதா கர்நாடக மாநில தலைவர் எடியூரப்பா, மாநில பொதுச் செயலாளர் அரவிந்த் லிம்பாவளி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதையடுத்து அவர், சுதந்திர தின விழா மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்க 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பா.ஜனதா சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி (தேசிய கொடி) யாத்திரையை தொடங்கி வைத்தார். நளின்குமார் கட்டீல் எம்.பி. மோட்டார் சைக்கிளை ஓட்ட பின்னால் தேசியக்கொடியுடன் ஹெல்மெட் அணிந்தபடி அமித்ஷா அமர்ந்திருந்தார்.

அவரைத்தொடர்ந்து தனது பாதுகாவலர் மோட்டார் சைக்கிளை ஓட்ட அவருக்கு பின்னால் தேசியக்கொடியை கையில் பிடித்தபடி மத்திய மந்திரி சதானந்தகவுடா அமர்ந்திருந்தார்.

அவர்களைத் தொடர்ந்து யாத்திரையில் கலந்து கொண்ட ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் தேசியக்கொடியை பிடித்தபடி மங்களூரு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். அவர்கள் உல்லால் பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி அப்பக்காவின் சிலை அமைந்திருக்கும் இடத்திற்கு சென்றனர்.

அங்கு ராணி அப்பக்காவின் சிலைக்கு அமித்ஷா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதையடுத்து அவர் கள் நேராக மங்களூரு பல் கலைக்கழகத்திற்கு சென்றனர். அங்கு பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது கூறியதாவது:-நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் இழந்தவர்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மங்களூருவில் சுதந்திர போராட்ட காலங்களில் போர்ச்சுக்கீசியர்கள் படையெடுத்து வந்தனர். அப்போது அவர்களை 7 முறை விரட்டியடித்த வீரமங்கை ராணி அப்பக்கா ஆவார். சுதந்திரத்திற்காக பாடுபட்டு பலியானவர்களில் ராணி அப்பக்காவின் பங்கு முக்கியமானதாகும்.

உலக அளவில் நம்நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது. வேறு நாடுகள் ஆச்சரியப்படும் வகையில் இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்கிறது. நாட்டில் எந்தவொரு அசம்பாவித நிகழ்வுகள் நடந்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நம்நாட்டு ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் தேசபக்தி கண்டிப்பாக இருக்க வேண்டும். தேசபக்தி இல்லை என்றால் நாடு முன்னேற முடியாது. தேசத்துரோக செயல்களில் எந்தவொரு குடிமகனும் ஈடுபடக்கூடாது. பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் இந்திய ராணுவத்துக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்ட சம்பவம் நம்நாட்டில் ஒரு கருப்பு தினம் ஆகும்.இவ்வாறு அவர் கூறினார்.