32 தமிழர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும்

276 0

201608220923272203_Donot-Make-Redwood-Smugglers-as-Heroes-Gopala-krishna-Reddy_SECVPFரேணிகுண்டாவில் பிடிபட்ட 32 தமிழர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி கூறினார்.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் கடந்த 4-ந் தேதி 32 தமிழர்களை ஆந்திர போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது செம்மரக் கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து சித்தூர் ஜெயிலில் அடைத்தனர். கைதானவர்கள் சென்னை, வேலூர், திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள். அவர்கள் மீது ஜாமீன் கிடைக்காத வகையில் 6 சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான 32 தமிழர்களை ஜாமீனில் எடுப்பதற்காக தேவையான சட்டஉதவிகளை செய்வதற்காக தமிழக அரசின் சிறப்பு வக்கீல்கள் முகமது ரியாஸ் மற்றும் அருள் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 32 தமிழர்கள் சார்பில் ஜாமீன் கேட்டு திருப்பதி 5-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் கடந்த 8-ந் தேதி மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி விஜயா, செம்மரக்கடத்தலை தடுக்க ஆந்திர வன சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தின்படி 32 பேருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என மனுக்களை தள்ளுபடி செய்தார். அதைத்தொடர்ந்து திருப்பதி கோர்ட்டில் தமிழக அரசு வக்கீல்கள் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பாக ஆந்திர மாநில வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

செம்மரக் கட்டைகளை வெட்ட வருபவர்களை மட்டுமே நாங்கள் கைது செய்கிறோம். திருப்பதிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அனைவரையும் கைது செய்யவில்லை. செம்மரக் கடத்தல்காரர்களை கதாநாயகர்களாக்க கூடாது. கடத்தல்காரர்களுக்கு தமிழக அரசு ஆதரவு தருகிறது என்றால் அது அவர்களின் விருப்பம்.

பிடிபட்டவர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும். செம்மரம் வெட்டவோ, கடத்தவோ வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கடத்தலின்போது பிடிபட்ட செம்மரங்கள் அடுத்த மாதம் ஏலம் விடப்படுகிறது. இவ்வாறு மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி கூறினார்.