ஹிலாரிக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

479 0

201608210725358048_Judge-Orders-Hillary-Clinton-To-Give-Written-Testimony-In_SECVPFஇ மெயில் விவகாரத்தில் ‘ஜூடிசியல் வாட்ச்’ அமைப்பு எழுப்புகிற கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில்கள் தருமாறு ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இ மெயில் விவகாரத்தில் ‘ஜூடிசியல் வாட்ச்’ அமைப்பு எழுப்புகிற கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில்கள் தருமாறு ஹிலாரி கிளிண்டனுக்கு அமெரிக்க கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அமெரிக்காவில் ஹிலாரி கிளிண்டன் (வயது 68), 2009-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி முதல் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந் தேதி வரையில் வெளியுறவு மந்திரி பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் அவர் துறை ரீதியிலான கடிதப்போக்குவரத்துக்கு தனது சொந்த இ மெயில் கணக்கை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், மத்திய புலனாய்வு படையினர் (எப்.பி.ஐ.) விசாரணை நடத்தினர். அவர்கள், ஹிலாரியிடம் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர் மீது குற்றம் சாட்டுவதற்கு இடமில்லை என்று அட்டார்னி ஜெனரலிடம் அறிக்கை அளித்தனர். அந்த விசாரணை அறிக்கை, அமெரிக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹிலாரி கிளிண்டன் வழக்கில் இருந்து தப்பினார். ஆனாலும் இது தொடர்பான சர்ச்சைகள் தொடர்கின்றன.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஹிலாரிக்கு எதிராக ‘ஜூடிசியல் வாட்ச்’ என்ற அமைப்பு, வாஷிங்டன் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கில் ‘கிளிண்டன்இமெயில்.காம்’ என்ற பெயரில் தனிப்பட்ட இ மெயில் கணக்கை அரசு பணிகளில் பயன்படுத்தியது ஏன் என்பது தொடர்பாக ஹிலாரி கிளிண்டனிடம் நேரில் கேள்விகள் கேட்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி எம்மெட் சுல்லிவன் விசாரித்தார். விசாரணை முடிவில் ‘ஜூடிசியல் வாட்ச்’ அமைப்பு எழுத்துப்பூர்வமாக எழுப்புகிற கேள்விகளுக்கு ஹிலாரி கிளிண்டன் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி எம்மெட் சுல்லிவன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அதே நேரத்தில் ஹிலாரியிடம் நேரில் கேள்விகள் கேட்பதற்கு அனுமதி அளிக்க முடியாது என நீதிபதி எம்மெட் சுல்லிவன் கூறி விட்டார். மேலும் ‘ஜூடிசியல் வாட்ச்’ அமைப்பு தனது கேள்விகளை அக்டோபர் 14-ந் தேதிக்குள் அளித்து விட வேண்டும். அந்த கேள்விகளுக்கு ஹிலாரி தனது பதில்களை 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு காலவரையறையை நிர்ணயித்துள்ளது.

இந்த உத்தரவை ‘ஜூடிசியல் வாட்ச்’ அமைப்பின் தலைவர் டாம் பிட்டன் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், “ஹிலாரியின் இ மெயில் ஊழல் தொடர்பாக எங்களுடைய முக்கிய கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என்று பெடரல் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது எங்களுக்கு நிறைவு அளிக்கிறது. இந்த பதில்களைப் பெறுவதற்கு நாங்கள் விரைவாக நடவடிக்கை எடுப்போம். ஹிலாரி சட்டத்தை விட மேலானவர் அல்ல என்பதையே கோர்ட்டு உத்தரவு நினைவூட்டுகிறது” என குறிப்பிட்டார்.

ஜூடிசியல் வாட்ச் அமைப்பின் இயக்குனர் கிறிஸ் பேரல் இதுபற்றி கூறும்போது, “வெளியுறவு மந்திரி பதவி வகித்த காலத்தில் சட்டவிரோதமாக தனியார் சர்வரை அவர் ஏன் பயன்படுத்தினார் என்பது தொடர்பாக பதில் பெறுவோம். கோர்ட்டின் உத்தரவு, சட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறோம்” என கூறினார்.

தற்போது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஹிலாரிக்கு இது பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி ஹிலாரியின் பிரசார செய்தி தொடர்பாளர் பிரையன் பேலன் கருத்து தெரிவிக்கையில், “1990-களில் இருந்தே பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டனை தாக்கி வருகிற வலதுசாரி அமைப்பு ‘ஜூடிசியல் வாட்ச்’. ஹிலாரியின் தேர்தல் பிரசாரத்தை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு இது. அவர்களது கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிக்கத்தயார் என்று கூறியதை ஏற்று கோர்ட்டு உத்தரவிட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தருகிறது” என கூறினார்.