நேரடி வைப்பு முறைமையை நிறுவத்துவதற்கான அறிவுறுத்தலை தமக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவிப்பு

283 0
சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக நேரடி வைப்பு முறைமையை நிறுவத்துவதற்கான அறிவுறுத்தலை தமக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
முறிவிநியோக மோசடி குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நான்காம் நாளாகவும் சாட்சி வழங்கும் போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகத் தினத்தன்று, மத்திய வங்கியின் அரச கடன் திணைக்களத்திற்கு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் சென்றமை தொடர்பில் சிரேஷ்ட மேலதிக மன்றாடியார் நாயகம், டபுல டி லிவேரா விளக்கினார்.
இதேவேளை, அர்ஜுன் மகேந்திரன், குறித்த திணைக்களத்துக்கு  பொறுப்பான பிரதி ஆணையாளர் தவிர, ஏனைய பிரதி ஆணையாளர்கள் இரண்டு பேருடன் அந்த திணைக்களத்துக்கு சென்றதாக மேலதிக மன்றாடியார் நாயகம் குறிப்பிட்டார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment