கிளிநொச்சி இளைஞர்களின் இரத்ததான முகாம் முன்னுதாரணமான செயல் பலரும் பாராட்டு

234 0
கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டில் நான்காவது தடவையாகவும் மாபெரும் இரத்ததான முகாம்
சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின்போது உயிரிழந்த மாணவர்கள் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
‘உணர்வுள்ளவர்கள் வாருங்கள் உறவுகளுக்கு உயிர் தாருங்கள்’ என்கின்ற தொணிப்பொருளில், கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர பழைய மாணவர்கள் அணியினரின் ஏற்பாட்டில் குறித்த இரத்ததான முகாம், நேற்றையதினம் காலை 09.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரையும் நடைபெற்றது.
 இது நான்காவது இரத்ததான முகாம் இதில் 2014 ஆம் ஆண்டு 23 பேரும், 2015 ஆம் ஆண்டு 48 பேரும், 2016 ஆம் ஆண்டு 97 பேரும், 2017 ஆம் ஆண்டு 83 பேருமாக தொடர்ச்சியாக இந்த வருடத்துடன் நான்காவது தடவையாக கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவர்களினால் மாபெரும் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.
தற்போதைய காலகட்டத்தில் இளம் சமுதாயமானது வாள்வெட்டு, கொலை, கற்பழிப்பு, மதுபோதை உட்பட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி சமூகவிரோத செயற்பாடிகளில் ஈடுபட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவர்களினால் வருடாவருடம் நடத்தப்பட்டு வரும் இந்த இரத்ததான முகாமானது உயிர்களை காக்கும் செயற்பாடாக காணப்படும் அதேவேளை சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணமாக காணப்படுவதாகவும், இந்த செயற்பாட்டினை குறித்த மாணவர்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் 2015 ஆம் ஆண்டு  உயர்தர மாணவா்களின்  இரத்ததான நிகழ்வினை கல்வியலாளர்களும் புத்தி ஜீவிகளும் பாராட்டியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment