நீதிக்கான நடைபயணத்துக்கு பொது அமைப்புக்களும் ஆதரவு!

336 0

625.0.560.320.160.600.053.800.668.160.90-29எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச நீதியை வலியுறுத்தும் நடைபயணத்துக்கு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளன.

தமிழர் பிரதேசங்களை சிங்கள மயமாக்கும் நோக்குடன் சிறீலங்கா இராணுவத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் தமிழர் தாயக அபகரிப்புக்கு எதிராகவும், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச நீதி கோரியும் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட செயலகமான அறிவகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள் சர்வதேச நீதி கோரும் போராட்டத்துக்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்திருந்தனர்.

மகிந்த ராஜபக்ஷவினால் தமிழ் மக்கள் மீது இரக்கமற்ற முறையில் நடத்தப்பட்ட இன அழிப்பு யுத்தத்திற்கு நீதி கோரியும் தமிழர்கள் நம்பி ஆதரித்த தற்போதைய நல்லாட்சிக்கான அரசு என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் மைத்திரி அரசினால் தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகளை அமைத்தும் புத்தர் சிலைகளை நிறுவியும் தாயகப் பிரதேசங்களை பௌத்த சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளை எதிர்த்தும் நீதிக்கான பேரணி இடம்பெறவுள்ளது.

தமிழர்களின் உரிமையை வலியுறுத்தி எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் நீதிக்கான நடைபயணத்துக்கு பூரண ஆதரவை வழங்கி அதில் பங்காளராக இணைந்துகொள்ளுமாறு கிளிநொச்சிமாவட்ட பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.