பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அல்கொய்தா உறுப்பினர் குற்றவாளி: அமெரிக்க கோர்ட் தீர்ப்பு

456 0

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அல்கொய்தா அமைப்பின் உறுப்பினர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து அவரை குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அமெரிக்காவில் தீவிரவாத செயல்களுக்கு உதவி செய்ததாக முகமது மஹ்மூத் அல்-பேரேக் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். ஆப்கானிஸ்தானில் 2009ம் ஆண்டு அமெரிக்க ராணுவ தளம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த பரேக், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக வெளிநாட்டிற்கு சென்றதும், 2007-ம் ஆணடு அவரும் இரண்டு சக மாணவர்களும் பாகிஸ்தான் சென்று அல்கொய்தா அமைப்பிடம் பயிற்சி பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

பரேக் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானது. இதனையடுத்து பரேக் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. 5 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

பரேக்குடன் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் 2 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதால் அவர்களுக்கு இதுவரை தண்டனை அறிவிக்கப்படவில்லை. மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment