தகுதி நீக்கம் செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப், 3-ந்தேதி கட்சி தலைவர் பொறுப்பு ஏற்பு?

318 0

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மத்திய காரிய கமிட்டி மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பு ஏற்பார் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

‘பனாமா கேட்’ ஊழலில், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 28-ந் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார்.

பாகிஸ்தான் சட்டப்படி, தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் கட்சித்தலைவர் பொறுப்பு வகிக்க முடியாது என்பதால், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார்.

இந்த நிலையில், அரசு ஊழியர் தவிர்த்து, எந்த ஒரு நபரும் எந்த ஒரு கட்சியிலும் என்னவொரு பதவியும் வகிக்க முடியும் என்ற வகையில், தேர்தல் சீர்திருத்த மசோதா ஒன்றை அந்த நாட்டின் பாராளுமன்ற மேல்சபை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதா, பாராளுமன்ற கீழ்சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டாலும், மேல்-சபையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு, கீழ் சபையிலும் ஒப்புதல் பெற வேண்டி உள்ளது.

இந்த மசோதாவில் பாராளுமன்ற உறுப்பினராக தகுதி படைத்த ஒருவர்தான் கட்சிக்கு தலைமை ஏற்க முடியும் என்று உள்ள விதி நீக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பாகிஸ்தான் பருவநிலை மாற்ற மந்திரி முஷாகிதுல்லா கான் நேற்று கூறுகையில், “திங்கட்கிழமையன்று தேர்தல் சீர்திருத்த மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும்” என்றார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று அது சட்டமாகி விடும்.

இதற்கிடையே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் பொதுக்குழு கூட்டம், அதேநாளில் நடக்கிறது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் கட்சியில் பதவி வகிக்க தடை செய்துள்ள விதியில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

அதைத் தொடர்ந்து 3-ந் தேதி கட்சியின் மத்திய காரிய கமிட்டி மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பு ஏற்பார் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a comment