முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ‘சிலீப்பர் செல்’ எம்.எல்.ஏ.க்கள் எப்பொழுது வரவேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போது வருவார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ‘தந்தி’ டி.வி.க்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
இரட்டை இலை சின்னம் கட்சியின் பெயர் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையாக விண்ணப்பித்திருக்கிறோம். தேர்தல் ஆணையம் முறையாக, நியாயமாக நடந்து கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தோ, அது எடுக்கிற முடிவுகள் குறித்தோ இப்போது நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
அ.தி.மு.க. அம்மா அணிக்கு எதிராக எத்தனை தாக்குதல்கள் வந்தன என்பது கழக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றாக தெரியும்.
எத்தனை தாக்குதல்கள், சோதனைகள் வந்தாலும் அதை சந்திக்கும் ஆற்றலும், திறமையும் எங்களிடம் உள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் பிப்ரவரி 15-ந்தேதிக்கு பிறகுதான் எல்லா விவரங்களையும் சமர்ப்பித்திருக்கிறோம்.அம்மா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்- அமைச்சராக பணியாற்றி வந்தார். அவர் பதவி விலகிய பின்னர்தான் பிரச்சினைகள் உருவானது.
இரட்டை இலை சின்னத்தை முடக்கியதோடு கட்சியின் பெயரையும், பயன்படுத்த முடியாமல் அப்போது செய்துவிட்டார். யார் இரட்டை இலையை முடக்கினார்களோ, அவர்களே இப்போது ஆட்சி அதிகாரத்தோடு இணைந்து விட்டார்கள்.அவர்களிடம் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி சொல்பவர்கள் ஏன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயக்கம் காட்டுகிறார்கள்.
எங்களை பொறுத்தவரை இந்த ஆட்சியே வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா படத்தையே அகற்றி விட்டார்கள்.அப்போதே பல நிர்வாகிகளும், எம்.எல்.ஏ., எம்.பி.க்களும் என்னிடம் வந்து மிகவும் ஆத்திரத்தோடு தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். நான்தான் அவர்களை சமாதானப்படுத்தி அங்கு இருக்கும்படி சொன்னேன்.
அங்குள்ள ‘சிலீப்பர் செல்’ ஸ்லீப் ஆகிவிட்டதா? என்று கேட்பது சரியான கேள்வி அல்ல. எப்பொழுது வரவேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போது வருவார்கள்.
ஆட்சியை அகற்றுவதற்கு எங்களிடம் உள்ள உண்மையான எண்ணிக்கையை நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். அவர்களிடம் 117 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குறைவாக இருந்தால் அவர்கள் ஆட்சியில் இருக்க அருகதையற்றவர்கள்.
பொதுக்குழுவை நாங்கள் எப்போது கூட்ட வேண்டுமோ அப்போது கூட்டுவோம். இப்போது அதற்கு அவசியம் இல்லை. சிலவற்றை மவுனமாக இருந்துதான் சாதிக்க வேண் டும்.
ஓ.பன்னீர்செல்வம் யாரால் முதல்-அமைச்சர் ஆனாரோ, அவருக்கும், கட்சிக்கும் பச்சை துரோகம் செய்து விட்டார்.
இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்றால் சசிகலா கொடுத்த பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டியது தானே? ஏன் அதற்கு பயப்படுகிறார்கள்.
பொதுக்குழு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றி தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளனர். அந்த பொதுக்குழு செல்லுமா? செல்லாதா? என்று இன்னும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. அதுபற்றிய வழக்கு ஐகோர்ட்டில் உள்ளது. அதன் விசாரணை அக்டோபர் 23-ந்தேதிதான் நடைபெற உள்ளது. அப்போதுதான் அவர்கள் கூட்டிய பொதுக்குழு செல்லுமா? செல்லாதா? என்பதை சொல்ல முடியும்.
எங்கள் பக்கம் உள்ள 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் பதவி நீக்கம் செய்யப் போகிறார் என்பதை தெரிந்து கொண்டு தான் நீதிமன்றத்தை நாடினோம்.
அதே நேரத்தில் தி.மு.க. உறுப்பினர்களையும், குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் குழு பரிந்துரையின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முடிவெடுத்ததை அறிந்து தி.மு.க.வும் கோர்ட்டுக்கு சென்றது.
யதார்த்தமாக நாங்களும், தி.மு.க.வும் கோர்ட்டை நாடியதை வைத்து எங்களுக்குள் ஏதோ உறவு இருப்பதாக கதை கட்டுவது அவர்களது அறியாமையை காட்டுகிறது.
நாங்கள் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். துரோகிகளின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். மீண்டும் அம்மா ஆட்சியை நிலை நிறுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

