முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்து ஒருங்கிணைத்ததுதான் உண்மையான அ.தி.மு.க. என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மதுரை கருப்பாயூரணியில் மாடு வளர்ப்போர் சங்கம் சார்பில் இன்று மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழக உரிமைகளை மீட்பதற்கு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்து ஒருங்கிணைத்ததுதான் உண்மையான அ.தி.மு.க.
எங்கள் தரப்பில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு பிரமாண பத்திரங்களை முழுமையாகவும், பெரும் பான்மையாகவும் தாக்கல் செய்துள்ளனர். எம்.ஜி. ஆரின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னம் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வான எங்களுக்கே கிடைக்கும். ஏனென்றால் பெரும் பான்மையான அபிட விட்டுகளை தாக்கல் செய்துள்ளோம்.
கட்சியை பொறுத்தவரை எல்லோரும் கருத்து சொல்லலாம். ஆனால் அது கட்சியின் கருத்தாகாது. நியாயமான கருத்துக்கள் இருந்தால் முதல்வரும், துணை முதல்வரும் ஆராய்ந்து செயல்படுத்து வார்கள்.
ஆட்சியை கவிழ்க்க பூதக் கண்ணாடி கொண்டு எதிர்க்கட்சிகள் குற்றங்களை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஆனால் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த அரசு ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒருமுறை பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. ஆட்சி அதிகாரத்தை குறுக்கு வழியில் கைப்பற்ற எதிர்க் கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.
தமிழகத்தில் 7 கோடி மக்களின் நலனுக்காக அம்மாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியைகாக்க 1½ கோடி தொண்டர்கள் அரணாக இருப்பார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு 48 சதவீதத்துக்குமேல் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்காலம் தொடங்கு வதையொட்டி முன்னேற்பாடு பணிகளை தயார் படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.