வைகோவை எச்சரித்த இலங்கையர்கள் – எடப்பாடி வருத்தம்

576 2

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோவை, இலங்கையர்கள் சிலர் எச்சரித்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 36வது அமர்வு, ஜெனிவாவில் கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமானது.

இதில் பங்கேற்ற வைகோ, ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து தமது கருத்தை முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில், அவர் முன்வைத்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக தெரிவித்து அங்குள்ள இலங்கையர்கள் சிலர் அவரை சுற்றி வளைத்து எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முதல்வரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் இடம்பெறாதிருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment