இந்தியாவின் பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், தமிழ் உணர்வாளருமான பாரதிராஜா வடமாகாணத்திற்கு நேற்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்
இதன் முதல் நிகழ்வாக கிளிநொச்சிக்கு சென்றிருந்த பாரதிராஜா, கிளிநொச்சியில் கணினி கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது, தமிழினத்தின் சிறப்பு பற்றியும், யாழ் மண்ணில் பிறந்த வீரத் தமிழனைப்பற்றியும் பாரதிராஜா மிகவும் உணர்வுபூர்வமாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
‘சுமார் 25 வருடங்களுக்கு முன் இந்த யாழ் மண்ணில் காலடி எடுத்து வைத்தேன். சுமார் ஒரு வாரகாலம் இங்கு தங்கியிருந்தேன்.
இது ஒரு தனி ஈழமாக பிறந்திருக்க வேண்டியதற்காக போராடிய வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பெரிய தலைவன் வே.பிரபாகரனுடன் அந்த ஒரு வார காலத்தை கழித்தேன்.
மிகச்சிறந்த வீரர்களைப்பற்றி வரலாற்றுக் கதைகளில் படித்திருக்கின்றோம். ஆனால் நிகழ் காலத்தில் வாழ்ந்த மிகப்பெரிய வீரத் தமிழன் பிரபாகரன் இந்த மண்ணில் பிறந்தான்.
இந்த யாழ் மண்ணில் பிறந்தான். தமிழனுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்து விட்டுச் சென்றான்.
அவரோடு ஒருவார காலம் இருந்த உணர்வுதான் தான் என்னை ஈழத்தமிழோடு பிணைந்திருப்பதற்கு காரணம்.’ எனவும் இயக்குனர் பாரதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

