விலங்கு மனத்தையும் விம்மி அழவைத்த வித்தியா!!

543 0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவு பல்கோடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று. பல தமிழ் மக்களை மட்டுமன்றி இனம் மதம் மொழி என அனைத்தையும் கடந்து மானுடத்தை நேசிக்கும் அத்தனை மக்களையும் அவளது பிரிவு உலுக்கியது.

அந்த வகையில் மனிதர்களை மட்டுமன்றி ஐந்தறிவு படைத்த சீவன் ஒன்றைக்கூட அந்த இளங்குருத்து வாடிப்போன சம்பவம் வேதனையில் வாட்டியுள்ளது.

மாணவி வித்தியா செல்லமாக ஒரு நாயினை வளர்த்து வந்துள்ளாள். சிறு குட்டியாக இருக்கும்போதே அதனை வளர்த்தபடியால் அதற்கு ‘குட்டி’ என்று பெயர் சூட்டினாள்.

செல்லமாக வளர்க்கப்பட்ட அந்த நாய் வித்தியா தினமும் பாடசாலை செல்லும்போது வீதிவரை அவளது தாயோடு வந்து வாலாட்டி வழியனுப்பிவைக்கும். பின்னர் பாடசாலை முடித்து வீடு வரும்போதுகூட வாலைக்குழைத்தபடி வித்தியாவை வட்டமிடும்.

வித்தியா இந்த மண்ணை விட்டு மறைந்து புண்ணிய சொர்க்கத்தில் குடிபுகுந்தபோது இந்த ஐந்தறிவு சீவனும் கோடானகோடி மக்களில் ஓருயிராக கதிகலங்கிப்போனது. சாவு நிகழ்ந்த அந்த நாட்களில் மிகுந்த சோகத்துடன் இந்த நாய் காணப்பட்டுள்ளது.

வித்தியாவின் உடலம் புதைக்கப்பட்ட இடத்தையே சில நாட்களாக குறித்த நாய் சுற்றிச் சுற்றி வந்து வானத்தைப் பார்த்து ஊளை ஒலி எழுப்பியுள்ளது.
வித்தியாவின் நாற்பத்தைந்தாம் நாளின்போது ‘குட்டி’யின் முன்னால் வித்தியாவின் அமருவப் படம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்போது அந்தப் படத்தையே ‘குட்டி’ வெறித்தபடி பார்த்துக்கொண்டு நின்றுள்ளது. இந்தக் காட்சி அப்போது அங்கே நின்ற மனிதர்களின் கண்களை மீண்டும் கலங்க வைத்துள்ளது.

ஊதையிற் பட்ட பூளைப் பூவைப்போல் கயவர்களால் நூறி எறியப்பட்ட எங்கள் வித்தியாவின் ஆத்துமா மனிதத்தை மட்டுமன்றி ஐந்தறிவு விலங்கினத்தையும் உருகவைத்துள்ளமை இதனூடு கண்கூடாகின்றதல்லவா!

 

Leave a comment