சசிகலா குடும்பத்தால் தான் ஜெயலலிதா சிறை சென்றார்: அமைச்சர் கே.சி.வீரமணி ஆவேசம்

273 0

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த பல்வேறு முறைகேடுகளால் தான் ஜெயலலிதா சிறை சென்றார் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு சோளிங்கரில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துவிட்டு அணிமாறி தினகரன் பின்னால் சென்றுள்ளனர். இதனால், அந்த தொகுதிகளில் தேர்தல் வருவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது. ஏனென்றால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு வேட்பாளரையும் வெற்றி பெற செய்தார்.

மன்னார்குடி குடும்பத்தினர் ஜெயலலிதாவை ஆட்டிப்படைத்தனர். அவர்களின் தலையீடு இருக்கும்போதெல்லாம், அ.தி.மு.க. தோற்று ஆட்சியை இழந்தது. சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த பல்வேறு முறைகேடுகளால் தான் ஜெயலலிதா சிறை சென்றார். அவர்களை ஒதுக்கி வைத்தபிறகு தொடர்ந்து ஆட்சி அமைக்க முடிந்தது.

ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும்போது அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் எல்லோரும் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். ஆனால், அவரை பார்க்க முடியவில்லை. ஜெயலலிதா நலமானதும் சசிகலா எங்களைப்பற்றி தவறாக போட்டு கொடுத்துவிடுவாரோ என பயந்து நாங்கள் வெளியே வந்து ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சொன்னோம்.

ஜெயலலிதாவிற்கு ஒரு தோழி சசிகலா என்றால் அவர் என்ன செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டாமா? ஏன் அவரை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று உயர் ரக சிகிச்சைகளை அளிக்கவில்லை. இன்றுள்ள சூழ்நிலையில் பலர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கின்றனர். ஆனால், முதல்வராக இருந்த ஜெயலலிதாவை ஏன் வெளிநாட்டுக்கு தோழி அழைத்து செல்லவில்லை.

சோளிங்கர் தனி தாலுகாவாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment