மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நடத்தினார்

326 0

Untitled-1105கொடூரமான – மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நடத்தினார். இறுதியில் தேர்தல் தீர்ப்பைக் கூட அவர் மாற்றியமைக்க முற்பட்டார். அந்தவேளை, சில நாடுகள் நேரடியாகத் தலையிட்டு இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

புலம்பெயர்ந்து இலண்டனில் வாழும் எழுத்தாளர் தா.தேச இலங்கை மன்னன் எழுதிய சர்வதேச மனித உரிமை சாசனம் நூல் வெளியீட்டு விழா யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட காலகட்டத்தின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் மிகப் பெரிய விவாதம் வல்லாண்மை மிக்க நாடுகளுக்கிடையில் இடம்பெற்றிருந்தது. 2011ஆம் ஆண்டு அமெரிக்கா இராஜாங்க அமைச்சு, சம்பந்தன் தலைமையில் எங்களை அழைத்தது. உலக நாடுகளுடைய விவகாரங்களைக் கையாள்வதற்கு மாத்திரமல்ல மனித உரிமைகள் சம்பந்தமாக ஆராய்கின்ற அமைப்புக்கள், அதற்கான தலைமைகள் என அனைத்துத் தரப்பினருடன், உரையாட இதன்போது சந்தர்ப்பம் கிடைத்தது. 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

27ஆம் திகதி மாலை அந்த அமைப்புக்களுக்குப் பொறுப்பாகவிருந்த மனித உரிமைகள் பேரவையின் தலைவர்இ இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் இறுதியாக ஒரு தீர்மானமாக மனித உரிமைப் பேரவைக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக நவநீதம்பிள்ளை அம்மையார் எங்களுடன் மிகவும் நெருக்கமாகச் செயலாற்றினார்.

தற்போதைய இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் அதுல் கேஷாப் போன்றவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதியாக அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி எங்களுடன் இணைந்து பணியாற்றினார்கள். ஒவ்வொரு நாடுகளுடைய அரசியலைத் தீர்மானிப்பதிலும், எல்லைகளைத் தீர்மானிப்பதிலும், மனித உரிமைகளைத் தீர்மானிப்பதிலும் மனித உரிமைகள் பேரவையில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எங்களுடைய இனப்பிரச்சினையிலும் 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம்இ மனித உரிமை அடிப்படையில் கடந்த வருடத்தில் ஒரு மாற்றத்திற்கு வித்திட்டது. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் தீர்ப்பைக் கூட மாற்றியமைக்க முற்பட்டார். அந்தவேளை சில நாடுகள் நேரடியாகத் தலையிட்டு நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.

நாங்கள் பல துன்பங்களை, வலிகளை அனுபவித்திருந்தும் எங்களுடைய மக்கள் மனம் சோராமல் தங்களுடைய அரசியல் இலக்கை நோக்கிப் பயணித்தமை தற்போதைய ஆட்சி மாற்றம் உருவாகுவதற்குக் காரணமாகவிருந்தது. மிகப் பெருமளவில் இதற்கான பிரசாரங்களை நாங்கள் வீடு வீடாகச் சென்று செய்யாமலேயே ஜனாதிபதித் தேர்தலில் மாற்றத்தை உருவாக்கினார்கள். இத்தனை துயரங்கள் மற்றும் அழிவுகளுக்குப் பின்பும் ஜனநாயக ரீதியாக மனித உரிமைக் கோட்பாடுகளுக்கும், சுய உரிமைக் கோட்பாடுகளுக்கும் உலகத்திலே விடுதலைக்காகப் போராடிய நாடுகளில் விடுதலை பெற்ற எல்லைகளை நிர்மாணிப்பதற்கு எடுத்த சந்தர்ப்பங்களைவிட இது இன்னொரு படி உயர்ந்ததாக இருந்ததைப் பல நாடுகள் எங்களுடைய மக்களுக்கு தங்கள் நன்றிகளாகச் சொல்லியிருக்கின்றன என்றார்.