தேர்தல் முறைகேடு செய்பவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்: பா.ஜ.க.

295 0

தேர்தல் முறைகேடு செய்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் ராஜேஷ் லக்கானியிடம் பா.ஜ.க.வின் தேசியக்குழு உறுப்பினர் டாக்டர் எச்.வி.ஹண்டே அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்கள் கட்சி சார்பில் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட சில பிரச்சினைகளை எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம். வாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளரின் பெயர் மீண்டும் மீண்டும் இடம் பெறுவதை திருத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகிய பணிகள் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறைதான் அந்தப் பணி நடக்கிறது. இதை சரிசெய்ய வேண்டும்.

வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, ஆதார் அட்டை நம்பரை பயன்படுத்தி தகவல்களை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்.

கடந்த 8 மாதங்களாக காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தலை உடனே நடத்த வேண்டும். அந்தத் தொகுதியில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வேட்பாளர்களை மீண்டும் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, அந்தத் தொகுதியில் தேர்தல் தள்ளிப்போக காரணமாயிருந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும்.

தேர்தலை அறிவிப்பதற்கு முன்பே பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுக்கவேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிலையை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு, ஹண்டே அளித்த பேட்டி வருமாறு:-

தமிழக பா.ஜ.க. கட்சியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுவின் சார்பில் சில கோரிக்கைகளை ராஜேஷ் லக்கானியிடம் கூறியிருக்கிறேன். நான் 1964-ம் ஆண்டில் இருந்து 6 தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறேன். இரண்டு முறை அமைச்சராக இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடாமல் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

திருமங்கலம் பார்முலா என்று கூறும் அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் நிலை எழுந்துள்ளது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் தேர்தல் நடத்துவதில் அர்த்தம் இருக்காது என்று ராஜேஷ் லக்கானியிடம் கூறியிருக்கிறோம். அதில் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். தேர்தல் முறைகேடு செய்பவர் யாராக இருந்தாலும் அவரை வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்ற கருத்தையும் கூறினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment