மாகாண சபைத் தேர்தல்கள் எதுவும் மார்ச் வரை நடைபெறா !- அமைச்சர் பைஸர்

317 0

புதிய தேர்தல் முறைமையின் கீழ் அடுத்த வருடம் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை நிர்ணயக் குழு எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளது. ஐவர் அடங்கவுள்ள இக்குழுவுக்கு சகல சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இக்குழு தனது அறிக்கையை 4 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும். பின்னர் இவ்வறிக்கையை பிரதமர் உட்பட கட்சித் தலைவர்கள் ஆய்வு செய்வர். அடுத்து ஜனாதிபதிக்கு கையளிக்கப்படும். பின்னர் ஜனாதிபதியினால் அது வர்த்தமானியில் அறிவிக்கப்படும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதும் பின்னர் இடம்பெறும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த20 ஆம் திகதி இரவு  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினால் நிறைவேற்றப்பட்டமை, தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட ஒரு தந்திரமே என கூட்டு எதிர்க் கட்சி குற்றம்சாட்டியது உண்மையாகியுள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் வருடக் கணக்கில் ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், மாகாண சபைத் தேர்தலையும் பிற்போடுவதற்கு உரிய காரணத்தை அரசாங்கம் சட்ட ரீதியில் உருவாக்கிக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment