மட்டக்களப்பு திருப்பெருந்துறை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில்……(காணொளி)

6198 0

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை நிறுத்தக்கோரி திருப்பெருந்துறை பகுதி கிராம மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பெருந்துறை கிராம மக்களால் கடந்த 30 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா மட்டக்களப்பு மாநகர சபையால் திருப்பெருந்துறை பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடை நிறுத்துமாறு இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில் மாநகர சபையால் குறித்த இடைக்கால தடை உத்தரவினை இரத்து செய்யுமாறு கோரி மாவட்ட மேல் நீதிமன்றில் கடந்த 18 ஆம் திகதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.இசர் தீன் குறித்த மனு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் 4 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்ததுடன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் மட்டக்களப்பு மாநகர சபைக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவினை இரத்து செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் மாநகர சபைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு, மாவட்ட மேல் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாநகர சபையினால் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

மாநகர சபையினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது சேகரிக்கப்பட்ட கழிவுகளை திருப்பெருந்துறை பகுதியில் உள்ள கழிவுகள் முகாமைப்படுத்தும் நிலையத்திற்கு கொட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்ட போது, அப்பகுதி மக்கள் கழிவுகளை ஏற்றி சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் தமது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால், மாநகர சபைக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை திருப்பெருந்துறை பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டன.

Leave a comment