மனிதாபிமானம் அடிப்படையில் வடகொரியாவுக்கு 8 மில்லியன் டாலர் வழங்குகிறோம்: தென்கொரியா

244 0

மனிதாபிமானத்தின் அடிப்படையில் வட கொரியாவுக்கு 8 மில்லியன் டாலர் அளவில் நிதியுதவி வழங்கப்பட உள்ளது என தென்கொரியா அரசு தெரிவித்துள்ளது.

வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்து வருகிறது. இதற்கு தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

மேலும், வடகொரியா அரசு மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மனிதாபிமானத்தின் அடிப்படையில் வடகொரியாவுக்கு 8 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட உள்ளது என தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், உலக உணவு அமைப்பு மற்றும் யூனிசெப் அமைப்பின் பரிந்துரையின் பேரில் வடகொரியாவுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது வடகொரியாவுக்கு நிதி வழங்குவதற்கு கண்டனங்கள் எழுந்தன.

ஆனாலும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் வடகொரியாவுக்கு நிதியுதவி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சுமார் 8 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இந்த நிதியில் 4.5 மில்லியன் டாலர் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவதற்கும், 3.5 மில்லியன் டாலர் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ
செலவுகளுக்காக வழங்கப்பட உள்ளது. விரைவில் இந்த நிதியுதவி அவர்களுக்கு சென்று சேரும்.

கொரியா பகுதியில் நிலவிவரும் பதட்டமான சூழ்நிலையிலும், வடகொரியாவுக்கு நிதியுதவி வழங்க தென்கொரியா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment