பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சாசன சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது 

209 0

பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சாசன சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கயந்த கருணாதிலக இந்த தகவலை தெரிவித்தார்.

நாளை மறுதினம் குறித்த சட்டமூலம் முன்வைக்கப்படவிருந்தது.

எனினும் இதனை காலவரையறை இன்றி ஒத்திவைப்பதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 20ஆம் திருத்தச் சட்ட மூலமும் நாளையதினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலமானது நாளையதினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்தது.

ஆனால் அதற்கு பதிலாக நாளையதினம் புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருப்பதாக, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்ஒருவர் சூரியன் செய்திப்பிரிவுக்கு கூறினார்.

மாகாண சபைகளின் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையில் 20ஆம் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் முன்வைத்திருந்தது.

ஆனால் குறித்த சட்டமூலம் தொடர்பில் இணக்கபாடற்றத் தன்மை நிலவுகின்ற நிலையில், அதற்கு பதிலாக நாளையதினம் வேறொரு சட்டமூலம் முன்வைக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 20ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஏலவே சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு இன்றையதினம் சபாநாயகரினால் நாடாளுமன்றத்தில் வைத்து வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த வாரம் 20ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால், ஆட்சிக் காலம் நிறைவடைகின்ற கிழக்கு, சப்ரகமுவை மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment