பறக்கும் விமானத்தில் பிறந்த அழகிய பெண் குழந்தை

367 0

woman who gave birth onairதுபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு விமானத்திலேயே குழந்தை பிறந்தது. அந்த குழந்தை வாழ்நாள் முழுக்க இலவசமாக பயணிக்க Cebu Pacific Airlines நிறுவனம் சலுகை வழங்கியுள்ளது.

அக்டோபர் மாதம்தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் சொல்லியிருந்ததால் துபாயிலிருந்து பிலிப்பைன்ஸ் செல்ல முடிவெடுத்திருக்கிறார் அந்த பெண். ‘இன்டர்னேஷ்னல் ஏவியேஷன்’ விதிகளின்படி கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்ப காலம் 24 – 32 வாரங்கள் ஆகியிருந்தால் மட்டுமே விமானத்தில் பயணிக்க முடியும். 32 வாரங்களுக்கு மேல் ஆகியிருந்தால் கட்டாயம் மருத்துவ சான்றிதழ் இருந்தால்தான் பயணிக்க முடியும். ஆனால் இந்த பெண்ணுக்கு 29வது வாரம்தான் நடந்துகொண்டிருந்தது.

துபாயிலிருந்து மணிலா ( பிலிப்பைன்ஸ் தலைநகர்) 9 மணி நேர பயண தூரம். மணிலாவை நெருங்க 5 மணி நேரம் இருக்கும்போது பிரசவ வலியால் துடித்திருக்கிறார். அப்போது விமானம் இந்தியாவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. விமான பணிப்பெண்கள் செய்வதறியாது திகைத்து நின்றபோது , அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் இருந்த இரண்டு செவிலியர்கள் உதவிக்கு வந்திருக்கிறார்கள்.

Medical Emergency காரணமாக விமானத்தை இந்தியாவில் தரையிறக்க அனுமதி கேட்டனர் விமானிகள். பெங்களூரு விமான நிலையத்தில் Emergency Landing செய்ய அனுமதியும் உடனே கிடைத்துள்ளது. அப்போது விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோதே அப்பெண்ணுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

அதே விமானத்தில் இரண்டு பேர் கைக்குழந்தைகளோடு பயணித்திருக்கின்றனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த புதிய துணிகளை புதிதாக பிறந்த குழந்தைக்கு கொடுத்து உதவியுள்ளனர்.

பிறந்த குழந்தை நலமுடன் இருந்தபோதிலும் குறை பிரசவம் என்பதால் விமானத்தை தரையிறக்கி மருத்துவ பரிசோதனை செய்வதே நல்லது என்ற முடிவுடன் விமானம் இந்தியாவில் தரையிறங்கியிருக்கிறது. மருத்துவர்களின் சோதனையில் தாயும் சேயும் நலமாக இருப்பதால் தொடர்ந்து பயணிக்கலாம் என சொன்ன பிறகு 9 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் பிலிப்பைன்சிற்கு கிளம்பியிருக்கிறது. விமானம் தாமதமானதற்கு எந்தவொரு பயணிகளும் எதிர்ப்போ, புகாரோ செய்யவில்லை .

விமானத்தில் பயணிக்கும் ஒருவருக்கு குழந்தை பிறக்கும் பட்சத்தில் அந்த விமானம் முதலில் எந்த நாட்டில் தரையிறங்குகிறதோ அந்த நாட்டின் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது மரபு. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த மரபை ஏற்றுக்கொண்டு குடியுரிமை வழங்குகின்றன. ஆனால் ஒரு சில நாடுகள் அதை கடைபிடிப்பதில்லை. இந்தியா அந்த மரபை கடைபிடிக்கிறதா என எனக்கு தெரியவில்லை. அந்த மரபின்படி பார்த்தால் இந்த குழந்தைக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விமானத்தை போன்றே கப்பலில் குழந்தை பிறந்தாலும் அந்த கப்பல் முதலில் சென்று சேரும் நாட்டின் குடியுரிமை அந்த குழந்தைக்கு கிடைக்கும்.