உயர்தர பரீட்சை மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம்

408 0

336203459Untitled-1உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாவட்ட வெட்டு புள்ளிகள் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இதன்காரணமாகவே தமது சொந்த மாவட்டங்களில் பரீட்சைகளுக்கு தோற்றாமல் வேறு மாவட்டங்களில் தோற்றுவதாகவும் இதனை தடுப்பதற்காகவே அமைச்சர் குறித்த மாவட்ட வெட்டுப்புள்ளிகளில் மாற்றத்தை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது நடைபெற்று வரும் உயர்தர பரீட்சைகளில் இவ்வாறு மாணவர்கள் தமது சொந்த மாவட்டங்கள் அல்லாத வெளி மாவட்டங்களில் பரீட்சைக்கு தோற்றியமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளமையும், அதற்கு அனுமதியளித்த இரண்டு பாடசாலை அதிபர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மாணவர்களுக்கான வினாத்தாள்கள் மாறி வழங்கப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்கள் அடுத்த வருடங்களில் இடம்பெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதுவரை பரீட்சைகளில் இடம்பெற்ற முறைக்கேடுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் ஆரம்பம்

நடைபெற்று வரும் உயர்தர பரீட்சையின் வினாத்தாள் திருத்தும் பணிகள் இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக 6 பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரி, கண்டி விகாரமகாதேவி, சுவர்ணமாலி, சீதாதேவி பாலிகா மகாவித்தியாலயம் மற்றும் யாழ் இந்து பெண்கள் கல்லூரி என்பன அடுத்த மாதம் 13ஆம் திகதியே திறக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு விசாகா, கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரி, குருநாகல் மலியதேவா, கண்டி கிங்ஸ்வூட், மாத்தறை சுஜாதா உள்ளிட்ட 21 பாடசாலைகளிலும் வினாத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் குறித்த பாடசாலைகள் பகுதியளவில் மூடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இம்மாதம் 31ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.