ரொஹிங்கிய கிளர்ச்சி குழு ஒரு தலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது

240 0

ரொஹிங்கிய முஸ்லிம் மக்கள் முகம்கொடுத்துள்ள மனிதாபிமான நெருக்கடி காரணமாக ரொஹிங்கிய கிளர்ச்சி குழுவான அர்சா எனப்படும் அராகான் ரொஹிங்கியர் பாதுகாப்பு இராணுவம் என்ற அமைப்பு ஒரு மாதகால ஒரு தலைப்பட்ச போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உடன்பாடு இன்று அமுலுக்கு வருவதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மியன்மார் இராணுவமும் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அர்சா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அர்சா அமைப்பு மியன்மார் பாதுகாப்பு தரப்பினர் மீது மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து மியன்மாரின் ரக்கின் பிராந்தியத்தில் இராணுவத்தினரால் ரொஹிங்கிய பொது மக்கள் மீது தொடர்ச்சியாக இன ரீதியான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டது.

இதனால் 400 வரையான ரொஹிங்கிய பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 2 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதினமானவர்கள் அகதிகளாக பங்களாதேஷிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்த மக்களுக்கு நிவாரண்களை பெற்றுக்கொடுக்க நிவாரணக் குழுக்களுக்கு 77 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மியன்மாரில் ரொஹிங்கிய குடியுரிமை, கல்வி மற்றும் தொழில்சார் அங்கிகாரம் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் 1978 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அவர்கள் மீது மனிதாபிமானமற்ற வன்முறைகள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment