டிரைவிங் லைசென்சு கூட்டத்தை குறைக்க சிறப்பு கவுண்டர் திறப்பு

20293 0

அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் டிரைவிங் லைசென்சு கூட்டத்தை குறைக்க சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டன.

வாகனத்தில் செல்லும் போது வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது. சாலை விபத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

ஒரிஜினல் உரிமம் இல்லாமல் இருந்தால் ரூ.500 அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் நடவடிக்கை தமிழகம் முழுவதும் தொடங்கி விட்டதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தில் செல்லவே தயங்குகிறார்கள்.

இதுவரையில் நகல் உரிமங்களை மட்டுமே கையில் வைத்திருந்தனர். லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் போலீசாரிடம் பிடிபட்டு அபராதம் செலுத்தி வருகின்றனர்.

போலீசாரின் நடவடிக்கையில் இருந்து தப்பித்து கொள்ள இரு சக்கர வாகன ஓட்டிகள் வட்டார போக்கு வரத்து அலுவலகங்களில் குவிகிறார்கள். புதியதாக லைசென்சு பெறவும், லைசென்சை தொலைத்தவர்கள் மேலும் புதிதாக பெறவும், பழகுனர் உரிமம் பெறவும், ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பொதுமக்கள் வசதிக்காக இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார போக்கு வரத்து அலுவலகங்களும் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று அனைத்து வட்டார போக்கு வரத்து அலுவலகமும் செயல்பட்டன.

வழக்கமான நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக காலை 9 மணிக்கே லைசென்சு புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின.

திருவான்மியூர், அயனாவரம், வளசரவாக்கம், அண்ணாநகர், மயிலாப்பூர், உள்ளிட்ட அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டன.

லைசென்சு பெற ஆண்- பெண் வாகன ஓட்டிகள் காலையிலேயே குவிய தொடங்கினார்கள். பெரும்பாலும் ஓட்டுனர் பழகுனர் உரிமம் (எல்.எல்ஆர்) பெறவும், லைசென்சை தொலைத்தவர்கள் புதிதாக எடுக்கவும் வந்திருந்தார்கள்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிய லைசென்சு, மற்றும் புதுப்பிக்க அதிகளவு வருகிறார்கள். லைசென்சு பெற விரும்புபவர்கள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப் பிக்கலாம். லைசென்சை தொலைத்தால் புதிதாக பெற ரூ.315 கட்டணம் செலுத்த வேண்டும். ஒரே நாளில் விண்ணப்பித்து பெறலாம். பழகுனர் உரிமம் பெற ரூ.130 கட்டணமாகும்.

பொதுமக்கள் அலைக் கழிக்கப்படாமல் விரைவாக உரிமம் பெற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment