புளோரிடாவை நோக்கி முன்னேறும் இர்மா புயல்: 50 லட்சம் மக்கள் வெளியேற உத்தரவு

297 0

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை மணிக்கு சுமார் 200 கி.மீ. வேகத்தில் சூறையாட துடிக்கும் இர்மா புயலின் கோரப்பிடியில் இருந்து தப்ப சுமார் 50 லட்சம் மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி பாய்ந்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்காவின் கீழ் பகுதியில் உள்ள கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளை தாக்கி துவம்சம் செய்தது. தற்போது புளோரிடாவுக்குள் நுழைந்துள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

எனவே அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மியாமி கடற்கரை மற்றும் கீ பிஸ்கயின் பகுதிகளிலும் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புளோரிடாவில் மையம் கொண்டிருக்கும் ‘இர்வின்’ புயல் படிப்படியாக நகர்ந்து ஜார்ஜியா, கரோலினாஸ் மாகாணங்களையும் அடுத்த வாரம் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் புளோரிடா மாநிலத்தின் கடலோர பகுதிகளில் வாழும் சுமார் 56 லட்சம் மக்களை தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அமெரிக்காவின் பேரிடர் மற்றும் அவசரக்கால நிவாரண முகமை வலியுறுத்தி உள்ளது. இந்த மாநிலத்தில் அமெரிக்க இந்தியர்கள் அதிக அளவில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment