நதிகளை மீட்போம் விழிப்புணர்வு கூட்டம்: சென்னையில் நாளை நடக்கிறது

272 0

சென்னையில் ஈஷா யோகா மையம் சார்பில் நதிகளை மீட்போம் விழிப்புணர்வு கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

அழிந்து வரும் நதிகளை மீட்கவும், நதிகளை காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஈஷா யோகா மைய நிறுவனர் ஐக்கி வாசுதேவ் நதிகளை மீட்போம் என்ற விழிப்புணர்வு பேரணியை கடந்த 3-ந்தேதி கோவையில் தொடங்கினார்.

தேசிய அளவிலான இப்பேரணியை மத்திய மந்திரி ஹர்‌ஷவர்த்தன் தொடங்கி வைத்தார். கோவையில் தொடங்கிய இந்த பேரணி அக்டோபர் 2-ந்தேதி டெல்லியில் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் இந்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இப்பேரணி நாளை (10-ந்தேதி) சென்னை வருகிறது. அதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நதிகளை மீட்போம் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடக்கிறது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், அமைச்சர் செங்கோட்டையன், அப்பல்லோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி, நடிகர் விவேக், நடிகை சுகாசினி, சி.ஐ.ஐ. (தமிழ்நாடு) தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

தொடர்ந்து நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், சினிமா பின்னணி பாடகர் கார்த்திக், பாடகி உஷா உதுப் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Leave a comment