போரில் இறந்தவர்களுக்கு நினைவு தூபி, தினம்: ஆராய தயார் – இலங்கை அரசாங்கம் 

217 0

போரில் மரணித்தவர்களுக்கு பொது நினைவுத் தூபி ஒன்றை நிறுவவும், நினைவுத் தினம் ஒன்றை அறிவிக்கவும் தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனைத் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக உயிரிழந்த தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூற பொது நினைவுத் தூபி ஒன்றை நிறுவ வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்தார்.

அத்துடன், நினைவுத் தினம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்ன,

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிநபர் பிரேரணையை வரவேற்பதாகவும், அதற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும், இந்த விடயத்தில் பாதுகாப்பு அமைச்சு சில அவதானிப்புக்களை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பொதுமக்கள் அணுகுதல் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றைக் கருத்திற்கொண்டு நினைவுத் தூபி அமைக்கும் இடம் குறித்த கவனம் செலுத்தப்படுகிறது.

மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.

எனினும், அநுராதபுரம் இதற்கு பொருத்தமான இடம் எனத் தாம் கருதுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதாவது, குறித்த இடங்களுக்கு மத்திய இடமாக அநுராதபுரம் அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இது தொடர்பில் கலந்துரையாடி எதிர்காலத்தில் சில ஏற்பாடுகளை செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

நினைவுத் தினமொன்றை அறிவிப்பது இரண்டாவது விடயமாகும்.

ஒவ்வொரு வருடமும் மே மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை நினைவுத் தினமாக அனுட்டிக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

நினைவுத் தூபியை பராமறிப்பது மூன்றாவது விடயமாகும்.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகங்கள் என்பன ஜனாதிபதி செயலகத்தின் வழிக்காட்டலின் கீழ் பராமரிப்பு பணிகளை முன்னெடுக்க அவதானிப்புகள் உள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி சில இணக்கப்பாடுகளுக்கு வரலாம் என்றும் அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

Leave a comment