கரீபியன் தீவுகளை பதம் பார்த்த இர்மா புயல்: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

359 0

கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் வீசிய இர்மா புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த புயல் மெக்சிகோவை நோக்கி நகர தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான இர்மா புயல், கரிபீயன் நாடான ஆண்டிகுவா – பார்புடா தீவு அருகே கடந்த 5-ம் தேதி கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 285 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. அத்துடன் கன மழை பெய்தது. இதில் கரீபியன் தீவிலுள்ள 95 சதவீதம் வெள்ளக் காடானது.

மேலும், செயின்ட் மார்ட்டின், செயின்ட் பார்தலெமி ஆகிய தீவுகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சுழன்று அடித்த சூறாவளி காற்றில் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. குடிநீர், மின்சாரம் இல்லாமல் 10 லட்சம் பேர் வீடுகளில் முடங்கி தவித்து வருகின்றனர். விர்ஜினாவில் 4 பேர், பர்புடா தீவில் ஒருவர், டட்ச் தீவில் 4 பேர் உள்ளிட்ட 14 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அமெரிக்க புயல் மைய அதிகாரிகள் கூறுகையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய புயலாக இது கருதப்படுகிறது. அடுத்து டொமினிக், ஹைதி உள்ளிட்ட கரிபீயன் தீவு நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. வரும் 10-ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை புயல் தாக்கக்கூடும். புயலின் தாக்கத்தால் பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மெக்சிகோ வளைகுடா பகுதியை நோக்கி புயல் நகர தொடங்கி இருப்பது அமெரிக்கர்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a comment