சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் அந்த அமைப்பின் நான்கு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர் என ரஷிய அரசு தெரிவித்துள்ளது.
சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன.
அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசையும், கிளர்ச்சியாளர்கள் மீதான அரசுப் படைகளின் தாக்குதலையும் ஆதரித்து வருகின்றன. அதேசமயம் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர், அனைவர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டெயிர் அல்-ஜோர் நகரில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளதாக பேஸ்புக் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி ரஷிய படை, சிரியா ராணுவத்துடன் இணைந்து வான் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 40 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் நான்கு பேர் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் போர் மந்திரியான குல்முராட் கலிமோவ் படுகாயம் அடைந்துள்ளார். அவரை அருகில் உள்ள அல்-முகாசன் பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளனர்.
இந்த தகவலை ரஷிய ராணுவ அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி தெரிவித்து இருப்பதாக ரஷிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.


