காஷ்மீர் மாநிலத்தின் ஆனந்த்நாக் பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் வாகனத்திற்கு தீவைத்ததில் ஆறு போலீசார் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆனந்த்நாக் பகுதியை சுற்றியுள்ள மசூதிகளில் இன்று, வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்த சீலர் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த முற்பட்டனர். போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர்.
போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பாதுகாப்பு படையினர் கூறினர். ஆனால் அதையும் மீறி போராட்டம் தொடரவே போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.
ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்த ஒரு போலீஸ் வாகனத்திற்கு தீவைத்தனர். இதில் ஆறு போலீசார் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கலவரத்தை அடுத்து ஆனந்த்நாக் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.


