ஹவாலா பணப் பரிமாற்றம்: பிரபல இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு 15 நாள் சிறை

246 0

ஹவாலா பணப் பரிமாற்ற வழக்கில் டெல்லியை சேர்ந்த பிரபல இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷியை 15 நாட்கள் சிறையில் அடைக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷி பெரும் அளவிலான பணத்தை துபாய், லண்டன் மற்றும் பிற வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததை கடந்த 2014-ம் ஆண்டு பொருளாதாரத்துறை அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர்.

வருமான வரித்துறையினர் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியபோது மொயின் குரேஷி லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.

பின்னர், டெல்லி கோர்ட் உத்தரவையடுத்து, இந்தியாவுக்கு திரும்பிவந்த அவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமினில் விடுதலையான அவரிடம் அமலாக்கத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் வங்கிகளில் பல லாக்கர்கள் அவரது ஊழியர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.  அவை குரேஷிக்கு உரியவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவர் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட அறிக்கையில் சி.பி.ஐ., முன்னாள் இயக்குநரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதி நள்ளிரவு மொயின் குரேஷியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். சுமார் பத்து நாட்கள் அவரிடம் விசாரணை நடத்திய  பின்னர் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். மொயின் குரேஷியை  வரும் 22-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவிட்டார்.

Leave a comment