அமெரிக்காவில் கணவர், மாமனார், மாமியாரால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் காணப்பட்ட தாயையும் அவரது குழந்தையையும் காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணம், ஹில்ஸ்பாரோ கவுண்டியில் தனது கணவர் தேவ்விர் கல்சி மற்றும் ஒரு வயது மகளுடன் வசித்து வந்தவர் இந்தியப் பெண் சில்கி கெயின்ட் (வயது 33). இந்த நிலையில் இந்தியாவில் இருந்து சில்கியின் கணவர் தேவ்விர் கல்சியின் பெற்றோர் ஜஸ்பிர், பூபிந்தர் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் மருமகள் சில்கியை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, சில்கிக்கும், அவரது கணவர் தேவ்விர் கல்சிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாமனார், மாமியார் தலையிட்டு, சில்கியை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் அந்தப் பெண்ணுக்கு முகம், கழுத்து என பல உறுப்புகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் சில்கியின் ஒரு வயது குழந்தைக்கும் தவறுதலாக முகத்தில் அடி விழுந்துள்ளது.
ஒரு கட்டத்தில் சில்கியை மாமனார் கத்தியைக் காட்டி மிரட்டியும் உள்ளார். வீட்டுக்குள் போட்டு பூட்டியும் உள்ளனர்.இனியும் பொறுத்துப்பார்க்க முடியாது என்ற நிலையில் சில்கி, இதுபற்றி இந்தியாவில் உள்ள தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர்கள் உடனே ஹில்ஸ்பாரோ கவுண்டி ஷெரீப் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து ஷெரீப் அலுவலக அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்றனர். கதவைத்தட்டியும் திறக்காத நிலையில், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அங்கே படுகாயம் அடைந்த நிலையில் காணப்பட்ட சில்கியையும், அவரது குழந்தையையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, சில்கியின் கணவர், மாமனார், மாமியாரை கைது செய்தனர்.அவர்கள் மூவரும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.

