மாணவி அனிதா தற்கொலையால் நீட் தேர்வுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது: ஜி.கே.மணி

451 0

அரியலூர் மாணவி அனிதா தற்கொலையால் ‘நீட்’ தேர்வுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஜி.கே.மணி கூறினார்.

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கரூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரத்தில் வருகிற 17-ந்தேதி சமூக நீதி மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேச உள்ளனர். இந்த மாநாடு ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும். வடமாநிலத்தில் இருந்து சரத்யாதவ் உள்பட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் இடஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இட ஒதுக்கீட்டில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய அளவு கிடைக்க வேண்டும். தமிழகத்தில் வேளாண் வளர்ச்சி சதவீதம் குறைந்து விட்டது.

கரூர், திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட ஊர்களில் ஜவுளி தொழில் மூலம் அன்னிய செலாவணி அதிக அளவில் கிடைத்து வந்தது. தற்போது சரக்கு, சேவை வரியால் ஜவுளி தொழில் நலிந்து வருகிறது. ஜவுளி தொழில் நலிவடைவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு, சேவை வரியை குறைக்க வேண்டும். ஜவுளி தொழிலுக்கு மானியங்கள் அதிக அளவில் வழங்க வேண்டும்.

சரக்கு, சேவை வரியால் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர். சிறு, குறு, நடுத்தர தொழில்களும் பாதிப்படைந்துள்ளது. விலை குறைந்த பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 28 சதவீதம் வரி விதிப்பால் விலைவாசி உயர்ந்துள்ளது.

 

‘நீட்’ தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். மாணவி அனிதா தற்கொலையால் ‘நீட்’ தேர்வுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

மாணவி அனிதாவை போல மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காமல் பல மாணவிகள் தவித்து வருகின்றனர். அவர்களது பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்ட ‘நீட்’ தேர்வு தேவை இல்லை. அரசு பஸ்களில் எழுதப்பட்ட திருக்குறளை அரசு அழிக்க கூடாது. அழிக்கப்பட்ட பஸ்களில் மீண்டும் திருக்குறளை எழுத வேண்டும். பொது இடங்களிலும் திருக்குறளை எழுத வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment