கடந்த 2012-ம் ஆண்டில் மலாலா மீது தாக்குதல் நடத்திய தலீபான் தீவிரவாதி சுட்டுக்கொலை

10770 0

பாகிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு சிறுமி மலாலா மீது தாக்குதல் நடத்தியவர் உள்பட 4 தலீபான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

பாகிஸ்தானில் கடந்த 2012-ம் ஆண்டு சிறுமி மலாலா மீது தாக்குதல் நடத்தியவர் உள்பட 4 தலீபான் தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் தெக்ரீக்-இ-தலீபான் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு தடை விதித்து இருந்தனர். அப்போது அங்கு வசித்து வந்த மலாலா என்ற சிறுமி தீவிரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் போராடி வந்தார்.

இதனால் கோபத்துக்கு உள்ளான தீவிரவாதிகள் சிறுமி மலாலா மீது கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவரது அமைதி சார்பு நடவடிக்கைகள், மதசார்பற்ற தன்மை மற்றும் தலீபான் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இந்த தாக்குதலை நடத்தியதாக தலீபான் அமைப்பு அறிவித்தது.

எனினும் இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் பிழைத்த மலாலா பின்னர் இங்கிலாந்து சென்று சிகிச்சை பெற்றார். தற்போது வெளிநாட்டிலேயே வசித்து வரும் அவர் தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்த சமூக நலப்பணிகளுக்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே மலாலா மீது நடந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் போலீசார், அவரை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதியை அடையாளம் கண்டனர். ‘தெக்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் ஸ்வாட்’ இயக்கத்தின் தலைவரான முல்லா பஸ்லுல்லாவின் உறவினரான குர்ஷீத் என்ற தீவிரவாதியே இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் குவைதாபாத் போலீசார் மீது நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களிலும் குர்ஷீத்தின் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் குவெட்டா நகர் அருகே உள்ள சதாப் பகுதியில் போலீசாருக்கும், தெக்ரீக்-இ-தலீபான் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று துப்பாக்கிச்சண்டை வெடித்தது. இதில் 4 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதில் குர்ஷீத்தும் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a comment