தமது உறவுகளை காணாமலே உயிர் விடும் உறவுகள்! இந்த சோகக்கதையின் முடிவுக்காக தமிழர்களாக ஒன்றுபடுமாறு அழைப்பு

526 0

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா  இல்லையா  என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்து வடக்கு கிழக்கெங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்   உறவுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில்  கடந்த மார்ச் மாதம் 8 ம் திகதி ஆரம்பித்த போராட்டம்  இன்று181 ஆவது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்து வருகிறது. அதேபோன்று கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மாசி  மாதம் 20 ம் திகதி ஆரம்பித்த போராட்டம்   இன்று 197  ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது

இவ்வாறே  வவுனியாவில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மாசி  மாதம் 24  ம் திகதிஆரம்பித்த போராட்டம்   இன்று 193  ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது அதேவேளை மருதங்கேணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 15 ம் திகதி  இன்று 174  ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது

அவ்வாறே திருகோணமலை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடந்த மார்ச் மாதம் 2 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று 187  ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த,இராணுவத்திடம் கையளித்த  கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை  முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமது பிள்ளைகளை தேடி போராட்டங்களில் ஈடுபட்டுவரும் தாய்மார்களில் காணாமல் போன தமது பிள்ளைகளை மீட்ப்பதர்க்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முல்லைத்தீவில் ஒரு தாய் மரணமடைந்ததோடு கிளிநொச்சியில் ஐந்து தாய்மார் மரணமடைந்துள்ளனர் இவ்வாறே தமது பிள்ளைகளை தேடி தமது யோசனைகள் மேலோங்கி நடைபிணங்களாக தமது பிள்ளைகளை தேடியலையும் உறவுகளுக்கு அரசாங்கம் உரிய பதில் வழங்காத நிலையில் விபத்துக்களில் சிக்குண்டும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு உள்ளாகியும் தமது உயிரை விடுகின்ற நிலை தொடர்கிறது

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் ஆரம்பித்து நான்கு மாதம் வரை மௌனம் காத்த ஜனாதிபதி அவர்கள் மக்களை நான்காவது மாதமாக போராட்டம் தொடர்ந்த நிலையில் சந்தித்து மக்களுக்கு அவர்கள் கேட்டுக்கொண்ட கோரிக்கைகளுக்கு இணங்கி உடனடியாகவே பெயர்பட்டியல் வெளியிட உத்தரவிடுவதாகவும் மறைமுக முகாம்களை பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று பார்வையிட் அனுமதிப்பதாகவும் தெரிவித்திருந்தார் ஜனாதிபதியின் வாக்கு பலிக்குமென நம்பிய மக்களுக்கு அவர் உத்தரவாதமளித்து இரண்டு மாதமாகியும் இதுவரை வாக்குறுதி எதுவும் நிறைவேறவில்லை

மாறாக பிள்ளைகளை தேடுபவர்கள் ஒவ்வொருவராக இறந்தபின் அவர்களை தேட யாரும் இருக்க மாட்டார்கள் இவ்வாறே வீதியோரம் இருக்கின்ற மக்கள் யோசித்து யோசித்து நோய்வாய்பட்டு இறந்துவிடுவார்கள் என்று அரசு மௌனம் காக்கிறதா என மக்கள் கூறுகின்றனர்

இந்நிலையில்  கடந்த 8 ஆண்டுகளாக முள்ளிவாய்க்காலில் இராணுவத்திடம் சரணடைந்த தனது மகனை தேடி வந்த முன்னாள் போராளி வீமனின்  தாயார்  ஈஸ்வரன் ருத்ராதேவி மாரடைப்பு காரணமாக கடந்த 31 ஆம் திகதி உயிரிழந்தார் .

முன்னாள் போராளி வீமன் (ஜனார்த்தனன) முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு  காணாமல் போய் எட்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒப்படைக்கப்படாத  நிலையில் குறித்த தாயார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் தொடர்ச்சியாக போராடி வந்தார். இந்நிலையில் தனது எதிர்பார்ப்பு நிறைவேறாமலே கடந்த 31-08 2017 அன்று  அமரத்துவம் அடைந்துவிட்டார்.

இவரின் இறுதிக்கிரியைகள் எட்டு மாவட்டத்தையும் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளின் சங்கம் மற்றும் கிளிநொச்சி மக்களும்  சூழ பூதவுடல் கிளிநொச்சி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இங்கு மக்கள் விடுத்த அழைப்பை ஒவ்வொரு தமிழனும் நிறைவேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

 

புலம்பெயர் தேசங்களின் நிதியுதவிகளை பெற்று தமது நிறுவனங்களினதும் அமைப்புகளினதும் இருப்பை தக்கவைத்து சுய இலாபம் அடையவும் மக்கள் மாதக்கணக்கில் போராட்டங்களை நடாத்தும் போது பங்களிப்பு செய்யாது தமது இருப்புக்களை தக்க வைக்க பல்வேறு இடங்களின் மக்களை குழப்பும் செயற்ப்பாடுகளில் ஈடுபடுவதனையும்

 

அரசியல் வாதிகள் தாங்கள் ஒருபுறமாக கருத்துக்களை தெரிவித்து  தங்களது இருப்புக்களை தக்கவைப்பதையும் நிறுத்தி தமது அரசியல் இலாபங்களுக்காகவும் அமைப்புக்கள் நிறுவனங்களின் சுய இலாபங்களுக்குமாக செயற்ப்படாமல்

தனித்தனியாக அரசியலுக்காகவோ அல்லது அமைப்புக்கள் நிறுவனங்களின் சுய இலாபங்களுக்காகவோ செயற்படாது மாதக்கணக்கில் போராடிவரும் மக்களின் போராட்டத்தோடு இணைந்து இந்த அரசு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வு வழங்கும் வரை

 

இன்னும் பல தாய்மார் இந்த நிலைக்கு ஆளாக இடமளிக்காது உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் அனைவரும் எமது உறவுகளாக நினைத்து தமிழர்களாக ஒற்றுமைப்பட்டு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய போராட்டங்களை மேற்கொண்டு இந்த உறவுகளின் போராட்டத்துக்கு விடை காண முன்வந்து இறந்த இந்த தாய்மாரின் பிள்ளைகளையும் ஏனைய பிள்ளைகளையும் மீட்க ஒன்றிணையுமாறு உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்

Leave a comment