பலாலி விமான நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய பணிகள் ஆரம்பம்!

4937 0
யாழ்ப்பாணம் பலாலி  விமான நிலையத்தினை இந்திய அரசின் உதவியுடன் பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதற்குரிய பணிகள் தற்போது துரிதப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது உள்ளூர் மற்றும் படைத்துறை விமான    நிலையமாகவுள்ள பலாலி விமான   நிலையத்தினை பிராந்திய விமான நிலையமாக   தரமுயர்த்துவதற்கான   வாய்ப்புகள் தொடர்பாக இந்திய அரசு கடந்த ஆண்டில்  சாத்திய ஆய்விற்கான களப்பணிகளை மேற்கொண்டிருந்தது. இதற்காக இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை விமான நிலையப் பணிப்பாளர் தீபக் சாஸ்திரி தலமையில் ஏழுபேர் கொண்ட அணியினர் பலாலி வந்திருந்தனர்
அவ்வாறு பலாலி வந்து திரும்பிய குழுவினரின் அறிக்கையின் பிரகாரம் பலாலி விமான தளத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது தொடர்பாக, இந்திய விமான நிலைய அதிகாரசபை ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளது.
 இதன் பிரகாரம் பலாலி விமானதளம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டால், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் கொண்டு வரப்பட்டு, சிவில் விமான சேவைகள் நிறுவனத்தினால் விமான நிலையம் இயக்கப்படலாம். இதற்காக மேலதிக காணி சுவீகரிப்புக்கு பிரதேச மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், ஓடுபாதையை விரிவாக்காமல், பலாலி விமான தளத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனப் பரிந்துரைத்துள்ளனர்.,
இதன் அடிப்படையில் எதிர்கால போக்குவரத்து மற்றும் பெரிய விமானங்களைத் தரையிறக்கும் வசதிகள் என்பனவற்றைக் கருத்தில் கொண்டே,  விமான நிலையங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் காணி சுவீகரிப்பு சர்ச்சைகள் இருப்பதால், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்காமல் அதனை தரமுயர்த்துவதே தற்போதுள்ள நல்ல தெரிவாகும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளும்  தெரிவித்துள்ளனர்.
    இதேவேளை பலாலி விமான தளத்தின் தற்போதைய ஓடுபாதை 2.3 கி.மீ நீளம் கொண்டதாக உள்ளது. இங்கு, சுமார் 100 பயணிகளை ஏற்றக் கூடிய, போயிங்- 717 போன்ற, ஒடுங்கிய உடலமைப்பைக் கொண்ட விமானங்களை தரையிறக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a comment