நவாஸ் ஷெரீப் மனைவிக்கு தொண்டைப் புற்றுநோய் ‘ஆபரேஷன்’ வெற்றி

283 0

தொண்டைப் புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நவாஸ் ஷெரீப் மனைவிக்கு அறுவை சிகிச்சை வெற்றி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை இழந்தார். சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவரது லாகூர் பாராளுமன்ற தொகுதிக்கு வரும் 17-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில், நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் நவாஸ் (வயது 66) போட்டியிடுகிறார். ஆனால் திடீரென அவரை தொண்டைப் புற்றுநோய் தாக்கியது. இருப்பினும் நோய், ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் குணப்படுத்தி விட முடியும் என டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதையடுத்து சிகிச்சைக்காக லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சை வெற்றி அடைந்துள்ளது.

இது தொடர்பாக நவாஸ் ஷெரீப் குடும்பத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இருந்தபோதிலும், குல்சூம் நவாஸ் அறுவை சிகிச்சை வெற்றி அடைய டுவிட்டரில் வாழ்த்திய ஒரு நலம் விரும்பிக்கு, அவரது மகள் மரியம் நவாஸ் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

லாகூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் குல்சூம் நவாஸ் வெற்றி பெற்றுவிட்டால், பாகிஸ்தான் பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என அந்தக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a comment