புனித ஹஜ் பெருநாள் இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்த் தலைவர் ஆகியோர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பை சிறப்பாக எடுத்துக்காட்டுவது ஹஜ் வணக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரிவினை மட்டும் கோலோச்சும் இன்றைய உலகில், பரஸ்பர பிணைப்பையும், தலைமைத்துவத்துக்கு கட்டுப்படும் போதனையையும் சமூகமயப்படுத்தும் ஹஜ், உலகிற்கு வழங்கும் உன்னத செய்தி, சமத்துவத்தின் மூலம் கட்டியெழுப்பப்படும் உயர்ந்த சமூக நீதியாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் சமத்துவம் என்பனவற்றைக் கட்டியெழுப்பும் உயர்ந்த பண்புகளுக்கு ஹஜ் பெருநாளில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கும், ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கும் உதவுகின்ற அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் பற்றி ஹஜ்ஜுப் பெருநாளின் ஊடாக நினைவூட்டப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புனித ஹஜ்ஜுப் பெருநாளின் உண்மையான தாற்பரியத்தினை உணர்ந்து ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, மற்றையவர்களின் பல்வகைமைக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை மக்களிடம் தாம் வேண்டிக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

