விட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்: சர்வதேச பேச்சுப் போட்டியில் இந்திய வம்சாவளி நபருக்கு தங்கப்பதக்கம்

457 0

கனடா நாட்டின் வான்கோவர் நகரில் நடைபெற்ற சர்வதேச பேச்சுப் போட்டியில் ‘விட்டுக் கொடுத்து வாழும் இல்லறம்’ என்ற தலைப்பில் பேசிய இந்திய வம்சாவளி நபர் தங்கப்பதக்கம் வென்றார்.

மக்களிடையே மேடைப்பேச்சுத் திறனை வளர்க்கும் வகையில் டோஸ்ட் மாஸ்டர்ஸ் இண்டர்நேஷனல் என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலகில் உள்ள முக்கிய நகரங்களில் சர்வதேச அளவில் பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பில் 141 நாடுகளில் உள்ள 16,400 அமைப்புகளை சேர்ந்த சுமார் 3 லட்சம் பேர் அங்கத்தினராக உள்ளனர்.

இறுதிச் சுற்றுப் போட்டியில் ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்குள்ளான ஒரு சிறப்புரையை போட்டியாளர்கள் தயார்படுத்த வேண்டும். அந்த உரையின் சாரம்சம், கருத்துகளை எடுத்துரைக்கும் பாணி மற்றும் அவர்களிம் மொழித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் முதல் பரிசு வழங்கப்படுகிறது.

அவ்வகையில், கனடா நாட்டில் உள்ள வான்கோவர் நகரில் இந்த ஆண்டுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பலரில் சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளியினரான மனோஜ் வாசுதேவன்(43) என்பவர், விட்டுக் கொடுத்து வாழும் இல்லறம் மற்றும் ஒருமைப்பாடு என்ற தலைப்பில் அபாரமாக பேசி முதல் பரிசான தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பேச்சுக்கலையில் ஆர்வம்காட்டிவரும் மனோஜ் வாசுதேவன், வெற்றிகரமான இல்லறத்துக்கு விட்டுக் கொடுத்து போக வேண்டியது அவசியம் என்பதற்கு முன்வைத்த உதாரணங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

‘நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண்ணை முதன்முதலாக சந்தித்தபோது, நாங்கள் ஆயுளின் இறுதிநாள் வரை இணைந்தே வாழ்வோம் என்ற கற்பனை எனக்குள் உதித்தது. ஆனால், திருமணமான பின்னர் எங்களுக்குள் வேறுபாடுகள் ஏற்பட்டன. பெரிய விஷயங்கள், சிறிய விஷயங்கள் மற்றும் சில வேளைகளில் ஒன்றுமே இல்லாத விஷயங்கள் தொடர்பாக எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

அப்போது எனது தாயார் எனக்கு ஒரு அறிவுரையை சொன்னார். “மன்மதன் எய்யும் அம்பினால் நீ காதல் வயப்படலாம். ஆனால், அன்பான இல்லற வாழ்க்கை அமைய வேண்டுமானால், மன்மதன் வில்லைப்போல் நீ இணைந்திருக்க வேண்டும். விட்டுக் கொடுத்து வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேண்டும்” என்ற அவரது அறிவுரையின் மூலம் பிற்காலத்தில் எனது வாழ்க்கை இனிமையாக அமைந்தது’ என்று அவர் பேசியதை அந்த அரங்கத்தில் இருந்த நீதிபதிகள் வெகுவாக பாராட்டினர்.

இதையடுத்து, முதல் பரிசான தங்கப்பதக்கத்தை மனோஜ் வாசுதேவன் வென்றார். கடந்த ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இந்த அமைப்பின் சர்வதேச பேச்சுப் போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த டார்ரென் டே என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றார். அவ்வகையில், தற்போது மனோஜ் வாசுதேவன் மூலமாக தொடர்ந்து இரண்டாவது முறையாக சிங்கப்பூர் இந்தப் பரிச்சை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment