சிரியா-லெபனான் எல்லையில் ஐ.எஸ்.அமைப்பினருடன் சண்டை நிறுத்தம் அமல்

333 0

சிரியா-லெபனான் எல்லையில் ஐ.எஸ். அமைப்பினருடன் லெபனான் ராணுவமும், சிரியா ராணுவமும் ஹெஸ்புல்லா அமைப்பினரும் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தி உள்ளனர்.

சிரியா-லெபனான் எல்லையில் ஒரு புறம் லெபனான் ராணுவத்துக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பினர் சண்டையிட்டு வந்தனர். இன்னொரு புறம், சிரியா ராணுவம் மற்றும் அவர்களது கூட்டாளிகளான ஹெஸ்புல்லா அமைப்புடன் சண்டையிட்டு வந்தனர்.

கடந்த வாரம் லெபனான் ராணுவமும், ஹெஸ்புல்லா அமைப்பினரும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக தாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவித்தனர். ஐ.எஸ்.அமைப்பினரை மலைப்பகுதிக்கு திரும்ப விரட்டியடித்து விட்டதாக கூறினர்.

இதற்கிடையே, கடந்த 2014-ம் ஆண்டு, சிரியா- லெபனான் எல்லைப்புற நகரமான ஆர்சல் நகரத்தை ஐ.எஸ். அமைப்பினர் வீழ்த்தி சென்றபோது, அங்கிருந்து லெபனான் ராணுவ வீரர்கள் 30 பேரை கடத்தி சென்றிருந்தனர். அவர்களில் 4 பேரை சுட்டுக்கொன்றனர். ஒருவர் படுகாயம் அடைந்து, மரணம் அடைந்தார். 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதி 9 வீரர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

எல்லைப்பகுதியில் உள்ள ஐ.எஸ். அமைப்பினருடனான சண்டையில், இப்போது கடத்தப்பட்ட வீரர்களில் எஞ்சிய 9 வீரர்களின் நிலையை அறிந்து கொள்ள லெபனான் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளது.இது தொடர்பாக ஐ.எஸ். அமைப்பினருடன் சமரசப்பேச்சு நடத்துவதற்கு ஏதுவாக சண்டை நிறுத்தம் செய்ய முடிவு செய்தது.

அதன்படி சிரியா-லெபனான் எல்லையில் ஐ.எஸ். அமைப்பினருடன் லெபனான் ராணுவமும், சிரியா ராணுவமும் ஹெஸ்புல்லா அமைப்பினரும் சண்டை நிறுத்தத்தை நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு அமல்படுத்தி உள்ளனர்.இதன் காரணமாக சிரியா-லெபனான் எல்லையில் குண்டு சத்தமின்றி அமைதி நிலவுகிறது.

Leave a comment